கலியுகம் எப்படி இருக்கும்


 கலியுகம் எப்படி இருக்கும்.

பகவான் கிருஷ்ணரிடம் பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் மேற்கண்ட கேள்வியை கேட்டனர்...

அதற்கு மாதவன், "சொல்வதென்ன? எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன்..." என்று கூறி... நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தி அவற்றை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்.

கோவிந்தனின் ஆணைப்படி நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியை கண்டான்... அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவை மிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணறு மட்டும் நீர் வற்றி இருந்தது...இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடநதான்.

அர்ஜூனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான குரலைக் கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பிப் பார்த்தான் அர்ஜூனன், அங்கு ஒரு கோரமான காட்சியை கண்டான்...

அந்தக் குயில் ஒரு வெண்முயலை கொத்தித் தின்று கொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்துக் கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதே என்று எண்ணியபடி, குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சி கண்டான்...பசு ஒன்று அழகிய கன்றுகுட்டியை ஈன்றெடுத்து, அதனைத் தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய்ப் பசு நாவால் வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். 

அதனால் அந்தக் கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது.

'தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்?' என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அடுத்ததாக நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுத்துக் கொண்டு திரும்பினான். அப்போது.மலை மேலிருந்து பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருந்த அனைத்து மரங்களையும் தடைகளையும் இடித்துத் தள்ளி, வேகமாக உருண்டு வந்தது. அவ்வாறு வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது.

ஆச்சர்யத்தோடு அதைக் கண்ட நகுலன் தெளிவு பெற பகவானை நோக்கி புறப்பட்டான்.

இவ்வாறு பாண்டவர்கள் நால்வரும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர்.

அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும் ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கூறி, அதற்கான விளக்கத்தை கேட்டனர். கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்.

"பீமா...! கலியுகத்தில் செல்வந்தர்களும், ஏழைகளும் அருகருகே தான் வாழ்வார்கள்... ஆனால், செல்வந்தர்கள் மிகவும் செழிப்பாக இருந்தாலும், தம்மிடம் உள்ளதில் ஒரு சிறு பகுதியைக் கூட ஏழைகளுக்குக் கொடுத்து உதவ மாட்டார்கள்... ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வந்தர்களாகவே ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழ்மையில் வாடி வருந்துவார்கள்...

நிரம்பி வழியும் நான்கு கிணறுகளுக்கு நடுவில் உள்ள வற்றிய கிணற்றை போல்...என்றார்.

பின்னர் அர்ஜூனனிடம் திரும்பிய கிருஷ்ணர்,

அர்ஜூனா! கலியுகத்தில் அரசாங்கத்தை ஆள்பவர்கள் இனிமையாகப் பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள்...

இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கயவர்களாகவே இருப்பார்கள்...இனிய குரலில் பாடிக்கொண்டே, முயலை கொத்தித் தின்ற குயிலைப்போல...!" என்றார்.

தொடர்ந்து சகாதேவனிடம் கிருஷ்ணர், "சகாதேவா! கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதுள்ள கண்மூடித்தனமான பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாக இருப்பார்கள்...

இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை கூட மறந்து விடுவார்கள்...

இதையடுத்து, பிள்ளைகளும் வருங்காலத்தில் தீய வினைகளால் துன்பத்தை அனுபவிப்பார்கள்.

இவ்வாறு, பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள்...கன்று குட்டியை நாவால் நக்கியே காயப்படுத்திய பசுவைப் போல்..."

அடுத்ததாக, நகுலனை பார்த்த கிருஷ்ணர்,

"நகுலா...! கலியுகத்தில் மக்கள் சான்றோர்களின் நற்சொற்களைப் கேளாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும், நற்குணத்தினின்றும்,

நன்னெறிகளிலிருந்தும் நீங்குவார்கள்...யார் நன்மைகளை எடுத்துக் கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்...

எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள்

இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்து நிறுத்தி, நிதானப்படுத்தி நன்னெறியுடன் செயல்படுத்த முடியும்...

மரங்களாலே தடுத்து நிறுத்த முடியாத பெரிய பாறையை.தடுத்து நிறுத்திய சிறு செடியைப் போல...!" என்று கூறி முடித்தார் பகவான் கிருஷ்ணர்.

ஆகவே, கலியுகத்தில் கவனமுடன் நம் வாழ்வை கழித்திடுவோம்...நன்னெறியில் வாழ்ந்து... 

பாவங்களிலிருந்து நம்மை காத்திடுவோம்..

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم