தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 31வது தலம்.
இறைவன் : பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்)
இறைவி : பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை
தல விருட்சம் : இலந்தை
தீர்த்தம் : கொள்ளிடம், கவுரி
புராண பெயர் : உமாப்புலியூர், திருவோமாம் புலியூர்
ஊர் : ஓமாம்புலியூர்
மாவட்டம் : கடலூர்
தேவாரப் பதிகம் பாடியவர்கள் :
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்
தேவாரப் பதிகங்கள்
பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிருள் நட்டம் ஆடும்எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலில் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே - திருஞானசம்பந்தர்
ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை
அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்
ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை
எழுபிறப்பும் எனையாளா வுடையான் தன்னை
ஊராரும் படநாகம் ஆட்டு வானை உயர்புகழ் சேர் தரும் ஓமாம் புலியூர் மன்னுஞ்
சீராரும் வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே -
திருநாவுக்கரசு சுவாமிகள்.
மணந்திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறங்கம் ஐவேள்வி இணைந்தநால் வேதம் மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையால் உணரும் குணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்றம் மற்றவை யுற்றது மெல்லாம் உணர்ந்தவர் வாழும் ஓமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே -
திருஞானசம்பந்தர்
தல வரலாறு :
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடிக்கு அருகிலுள்ள ஓமாம்புலியூரின் பழைய பெயர் பிரணவபுரம். அக்காலத்தில் இது இலந்தை வனமாக இருந்தது. அப்போது ஒரு சமயம் வனத்தில் வேடன் ஒருவனைப் புலி துரத்தியது. புலிக்குப் பயந்து ஓடிய வேடன், அங்கிருந்த வில்வமரம் ஒன்றில் ஏறி நின்றுகொண் டான். புலியும் அவனை விடுவதாய் இல்லை. மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. பொழுதும் சாய்ந்து இருட்டத் தொடங்கிவிட்டது.
தூங்கிவிடாமல் இருப்பதற்காக, மரத்திலிருந்த வில்வ இலைகளைப் பறித்துக் கீழே போட்டுக் கொண்டே இருந்தான் வேடன். அவன் போட்ட வில்வ பத்ரங்கள் (இலைகள்) அனைத்தும் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்திற்கு அர்ச்சனையாக ஆனது. அன்றைய தினம் மகா சிவராத்திரி என்பதால், இரவு முழுக்கக் கண் விழித்துச் செய்த வில்வ அர்ச்சனைக்காக வேட னுக்கும் அதற்குக் காரணமாக இருந்த புலிக்கும் அந்த இடத்திலேயே முக்தி கொடுத்தார் சிவபெருமான் என்று புராணக் கதை உள்ளது.
ஒரு முறை உமாதேவி கைலாயத்தில் பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்ள சிவபெருமானிடம் கேட்க, ஈசனும் அதை ஏற்று பிரணவ உபதேசம் செய்துக் கொண்டிருக்கும் போது உமையம்மையின் கவனமானது திசை திரும்புகிறது. இதனால் கோபமுற்ற சிவபெருமான், மானிடப் பிறவி எடுக்க பார்வதி தேவிக்கு தண்டனை வழங்குகிறார்.
அதன்படி பூவுலகம் வரும் பார்வதி தேவி, இக்கோவிலில் இருக்கும் இலந்தை மரத்தடியில் ஈசனை நினைத்து கடும்தவம் புரிகிறாள். இத்தவத்தினால் மகிழ்ந்த பெருமான், அன்னை பார்வதிக்கு காட்சி கொடுக்கிறார்.
சிவபெருமானை தட்சிணாமூர்த்தியாக மாறி தனக்குப் பிரணவ மந்திரத்தினை போதிக்க வேண்டும் என அன்னை சக்தி விருப்பம் தெரிவிக்க, அதனை ஏற்கும் ஈசன், அன்னையின் விருப்பப்படி தட்சிணாமூர்த்தியாக உபதேசம் செய்யும் முன், மறுபடியும் பார்வதியின் கவனம் சிதறும் வகையில் இங்கு இடையூறு வந்துவிடக் கூடாது என்பதற்காக சிவபெருமான் நந்தி தேவனை காவலுக்கு வாசலில் நிறுத்தி அன்னைக்கு உபதேசம் செய்கிறார்.
அந்த நேரத்தில் அங்கு வரும் முருகப் பெருமானை நந்திகேஸ்வரர் தடுக்க, முருகப் பெருமான் வண்டு உருவம் எடுத்து அபிஷேக தீர்த்தம் கொண்டு செல்லும் கோமுகம் வழியாக ஈசன் உபதேசம் செய்யுமிடத்திற்கு செல்கிறார்.
உபதேசம் கேட்டுக்கொண்டிருக்கும் அம்பாள் தலையில் சூடியிருக்கும் பூவில் உட்கார்ந்து குரு தட்சிணாமூர்த்தியாக இறைவன் அம்பாளுக்கு செய்யும் பிரணவ உபதேசத்தைக் கேட்டுக் கொண்டார். (சுவாமிமலையில் முருகப் பெருமான், தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தது ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு உபதேசம் செய்யும் போது ஒட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டதால் தான் என்று சொல்லப்படுகிறது).
இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்த தலமாதலால் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றது.
வேள்வியைக் குறிக்கும் என்பதால் வேள்விச் சிறப்புடைய ஊர் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்து வந்தது என்றும், ஹோமப் புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார்.
தலபெருமை :
குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது. குரு சன்னதி பொதுவாக கோயில் பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். ஆனால் இந்த தலத்தில் சுவாமி சன்னதிக்கும் அம்பாள் சன்னதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தெட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார். இப்படிப்பட்ட அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. குரு ஸ்தலங்களில் தலைசிறந்ததாக கருதப்படுவதற்கு இதுவே. காரணம் ஆகும்.
தில்லையில் நடராஜ பெருமானின் திருநடனத்தை காணும் முன்பு வியாக்ரபாத முனிவர் ஓமாப்புலியூர் வந்தார். சிதம்பரத்தில் நடராஜரின் திருநடனத்தைக் காண தனக்கு அருள்தர வேண்டும் என வேண்டினார். வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்டதால் இவ்வூர் இறைவன் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார். இங்கு அம்பாள் பூங்கொடி என அழைக்கப்படுகிறாள்.
பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த சதானந்தன் என்ற அரசன் தொழுநோயால் பாதிக்கப்பட்டான். இவன் சிவபக்தன்.அசரீரியின் வாக்குப்படி இவ்வூரிலுள்ள வர்ந்தனான் குளத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான்.
பொது தகவல் :
சுவாமி சன்னதிக்கும், அம்பாள் சன்னதிக்கும் நடுவில் மகா மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்து சிலாரூபத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.
சுயம்புமூர்த்தியாக ஈசன் சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் காட்சி அளிக்கிறார்.
அம்பாள் சன்னதியில் அழகாகக் காட்சித் தருகிறாள்.
சந்நிதியின் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும்; மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
சோழர் காலக் கல்வெட்டு ஒன்றும், பல்லவர்கள் காலத்தவை ஐந்தும் ஆக ஆறு கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.
இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் கருவறை கோஷ்டத்தில் காணப்படும் நடராஜரின் சிலாரூபம். இது வியாக்ரபாதருக்குக் காட்சி தந்த வடிவம் என்று கூறப்படுகிறது.
காவிரியின் வடகரையில் 63 சிவ ஸ்தலங்கள் உள்ளன. இவற்றில் தெட்சிணாமூர்த்திக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமையப்பெற்ற 31வது ஸ்தலம் ஓமாப்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயிலாகும்.
பிரார்த்தனை :
கல்வி, கேள்விகளில் சிறந்து திகழ இங்கு அதிகளவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வழிபடுகிறார்கள்.
நேர்த்திக்கடன் :
வியாழக்கிழமை மற்றும் குரு பெயர்ச்சி காலங்களில் இங்குள்ள குரு பகவானுக்கு விசேஷ அபிசேக ஆராதனை செய்கிறார்கள்.
சிறப்பம்சம் :
அதிசயத்தின் அடிப்படையில் சுயம்பு குருதலம்.
திருவிழா :
இங்கு குருபெயர்ச்சி விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது.
திறக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
إرسال تعليق