#கேள்வி : ஓஷோ , இரண்டு பிறவிகளுக்கிடையே உள்ள காலமற்ற இடைவெளியில் இந்த ஆன்மாவுக்கு என்ன நேரிடுகிறது ?
#பதில் : " ஒரு பிறவிக்கும் , மறுபிறவிக்கும் இடையில் ஏற்படும் அனுபவங்கள் ஒரு கனவுபோலத்தான் .
அப்பொழுது அது உண்மையைப்போலத் தோன்றும் .
ஆனால் புலன்களுக்கு வேலை இல்லை .
ஏனெனில் உடல் இல்லை .
அப்படிக் கனவு காணும்பொழுது உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வராது .
அப்படி சந்தேகம் வந்தால் அந்தக்கனவு கலைந்துவிடும் .
மிக ஆழமான கனவுகூட ஒரு சிறு சந்தேகத்தில் உடைந்துவிடும் .
ஆகவே , அந்த இடைவெளியில் நடப்பவை அனைத்தும் உண்மை போலவே தோன்றும் .
அப்பொழுது தோன்றும் தோற்றங்கள் மிகவும் அசாதாரணமானவையாகக்கூட இருக்கக்கூடும் .
ஆத்மா சொர்க்தை அடைவது அல்லது நரகத்தை அனுபவிப்பது என்பது இந்தக் கனவு நிலையைக் குறிப்பிடுவதுதான் .
உண்மையில் சொர்க்கமும் இல்லை , நரகமும் இல்லை !
பல மத ஏடுகள் , நரகம் பயங்கரமாக இருக்கும் என்று வர்ணிக்கின்றன . இது உண்மைதான் !
ஆனால் இது ஒருவித கனவு நிலை , அவ்வளவுதான் .
இரண்டு உடல்களுக்கிடையே இரண்டு ஆத்மாக்கள் இருக்கின்றன .
ஒன்று பாபங்கள் செய்த கெட்ட ஆத்மா . மற்றொன்று புண்ணியம் செய்த நல்ல ஆத்மா .
இந்த முழுமையான பாப ஆத்மாக்களுக்குத் தகுந்த தாய் , தகப்பன் கிடைப்பது மிகவும் கஷ்டம் .
இதுதான் கெட்ட ஆவி என்பது . நான் இதை ' பிரீதாஸ் ' (Pretas ) என்று அழைக்கிறேன் .
மாறாக நல்ல ஆவிகளை அல்லது நல்ல ஆத்மாக்களை ' தேவாஸ் ' (Devas ) என்று அழைக்கிறேன் .
இந்த முழு புண்ணிய ஆத்மாக்களுக்கும் தகுந்த பெற்றோர்கள் கிடைப்பது கடினம் ! இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள ஆன்மாக்கள் நல்லதும் , கெட்டதும் கலந்திருக்கின்றன .
ஆனால் அடுத்த பிறவியில் இதில் எதுவும் ஞாபகம் இருக்காது .
இன்னொரு விஷயத்தையும் நீங்கள் தெரிந்துகொள்வது நலம்!
ஒருவன் இரவில் தூங்குவதற்கு முன்பு உள்ள ஒரு மணி நேரத்தையும் , காலையில் எழுந்த பிறகு உள்ள ஒருமணி நேரத்தையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் , இறப்பதற்கு ஒன்பது மாதம் முன்பே அதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் .
சரியாகப் பயன்படுத்துவது என்றால் தியானம் மற்றும் பிரார்த்தனையில் இருக்கவேண்டும் .
இந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது ஆன்மா மறுபிறவி எடுப்பதற்கு முன்பு அந்த ஆன்மா நிலையாகவும் இல்லை , அது அங்கும் , இங்கும் அலைந்துகொண்டும் இல்லை . அது ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கிறது .
இதை தர்க்கரீதியாகப் புரிந்துகொள்ள முடியாது . இந்த ஆன்மாவில் முற்பிறவியில் ஏற்பட்ட அனுபவங்கள் கருத்துக்கள் , தீய மற்றும் நல்ல செயல்களின் பலன்கள் அனைத்தும் கரு வடிவில் அப்படியே பதிந்திருக்கின்றன .
அது மீண்டும் உடலை எடுக்கும்பொழுது அவை அனைத்தும் மெல்ல செயல்புரிய ஆரம்பித்துவிடுகின்றன .
அடுத்து நம் மதக்கொள்கைகளில் ஒன்று ......இந்த உலகம் ஒரு கனவு அல்லது ஒரு தோற்றம் என்றுதான் கூறுகின்றன .
இதன் அர்த்தம் என்னவென்றால் , இந்த உலகத்தை நீங்கள் ஒரு கனவைக் காண்பதுபோலக் காணவேண்டும் .
அதாவது சாட்சியாக நின்று சம்பந்தப்படாமல் பார்க்க வேண்டும் என்றுதான் இதற்கு அர்த்தம் .
அப்பொழுது உங்களுடைய தியானத்தன்மை கூடுகிறது .
நீங்கள் கனவில் பங்கு பெறுவதில்லை ! நீங்கள் வெறுமனே படுத்துக்கொண்டு , உங்கள் மனம் போடும் ஆட்டத்தை பிரக்ஞையற்று பார்க்கிறீர்கள் ! அதில் நீங்கள் உங்கள் உடலால் எந்த வேடமும் போடவில்லை .
நீங்கள் உங்கள் கனவில் ஒரு பார்வையாளனாக இருக்கிறீர்கள் .
அடுத்து இன்னொரு விஷயத்தையும் புரிந்துகொள்ளுங்கள் .
நமக்கிடையே உள்ள ஒரு அங்குல இடைவெளியில் பல ஆன்மாக்கள் நிறைந்து கிடக்கின்றன !
ஒரு கெட்ட ஆன்மா ஒரு உடலுக்குள் பாய்வது எப்படி ?
ஒருவன் மிகவும் பயந்த நிலையில் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம் .
அப்பொழுது அந்த உடல் தன் ஆத்மாவைச் சுருக்கிக்கொண்டுவிடுகிறது .
அந்த நிலையில் அந்த உடலின் சில பாகங்கள் வெற்றுத்தன்மையில் ( Empty ) இருக்கின்றன .
அப்பொழுது நம்மைச் சுற்றியுள்ள கெட்ட ஆவிகள் ஒன்றோ அல்லது பலவோ அந்த உடலுக்குள் பாய்ந்துவிடுகிறது .
ஆனால் தைரியமானவர்களிடம் இது நெருங்காது . ஏனெனில் அவர்களிடம் வெற்றிடம் ஏற்படாது .
ஒரு பயந்த ஆள் மிகவும் கீழான நிலையில் இருப்பதால் உயர்ந்த ஆன்மாக்கள் அந்த உடலுக்குள் புகாது .
உயர்ந்த ஆன்மாக்கள் எப்பொழுதும் மேலான - உயர்ந்த நிலையில்தான் உலவிக் கொண்டிருக்கும் .
கீழான . ஆத்மாக்கள்தான் கீழே உலவிக் கொண்டு தன் ஆசையைத் தீர்க்கத் துடித்துக்கொண்டிருக்கும் .
அவை இயற்கையாக மறுபிறவி எடுக்க நாளாகலாம் .
மாறாக ஞான ஆத்மா என்பது சுத்தமான உயிர்த்தன்மை .
இந்த உயிர் மிகவும் மேலான நிலையை அடைந்து பிரபஞ்ச உயிர்த்தன்மையோடு கலந்துவிடுகிறது .
இதற்கு மறுபிறவி கிடையாது . இது ஆசைகளற்ற ஆத்மா அல்லது உயிர்தன்மை .
மற்றவை அனைத்தும் மறுபிறப்பு எடுத்து எடுத்துத்தான் தன் உலக ஆசைகளைத் துறக்க வேண்டும் .
*ஓஷோ*
إرسال تعليق