வசந்த நவராத்திரி ஸ்பெஷல் !
பெற்ற தாயினை மறப்பதே பெரிய பாபத்தினைத் தருமானால் ஜகன்மாதாவான அந்த அம்பாளை மறப்பது ??????
எக்காலத்திலும் எல்லாரிடத்திலும் பூரணமான தாய்மையுணர்வு அம்பாளின் ஹ்ருதயத்தில் பொங்கி வழிகின்றது. தன்னால் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளிடத்திலும் தன்னுடைய கருணையை மழையாகப் பொழிவிக்கின்றாள் பராசக்தி.
அந்த அம்பாளின் மஹிமைகளும் வர்ணனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. அவளுடைய கருணையானது ஸாகரம் போன்று பரந்து அதுவும் வர்ணனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. அம்பாளைப் பற்றி அபிராமி பட்டர்,
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே!
என்று கூறுகின்றார்.
அம்மா! என்று தன்னுடைய சிறு குழந்தையானது அன்புடன் ஓடிவரும் போது அதனுடைய தாயானவள் எவ்வாறு தாயுள்ளத்துடன் தன்னுடைய குழந்தையை வாரியெடுத்து உச்சி முகர்கின்றாளோ, அது போன்று ஜகன்மாதாவான அம்பாளையும் நாம் ஒரு முறையாவது “அம்மா!” என்று உளங்கனிந்த அன்புடன் அழைத்துவிட்டால் நம்முடைய இடர் களைய அவள் ஓடிவருகின்றாள்.
தன்னிடம் அன்பு செலுத்தாத பிள்ளையிடம் கூட ஓர் அன்னை அன்பு செலுத்துவதைப் போன்று நாம் அவளை நினைக்காவிட்டாலும் நம்மிடையே அவள் இன்றளவும் கருணை மழையைப் பொழிந்து கொண்டிருக்கின்றாள். அதனால்தான் நாம் இன்றளவும் இம்மண்ணில் ஜீவித்துக் கொண்டிருக்கின்றோம். நாம் மறந்தாலும் நம்முடைய தாய் நம்மை மறவாமல் இருக்கின்றாள். ஆனால் பெற்ற தாயினை மறப்பது என்பது பரிஹாரமே இல்லாத மஹாபாபமாகும். பெற்ற தாயினை மறப்பதே இவ்வளவு பெரிய பாபத்தினைத் தருமானால் ஜகன்மாதாவான அந்த அம்பாளை மறப்பது தகுமா? அவள் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஒன்றைத் தவிர அது சற்றும் கலக்கமுறாத தூய அன்பு!
அந்த பராசக்தியான அம்பாள் ஜகத்பிதாவான பரமேஸ்வரனின் பத்நியாக இருந்து கொண்டு நம்மனைவர்க்கும் தாயாக இருந்து கொண்டு இந்த உலகத்தினை நடத்துகின்றாள்.
Post a Comment