திருக்கயிலாய வாத்தியம் சிவ வாத்தியம் பஞ்ச வாத்தியம்

 

திருக்கயிலாய வாத்தியம் சிவ வாத்தியம் பஞ்ச வாத்தியம் 
 
தனி ஒரு மனிதரால், எக்காலத்திலும் தோற்றுவிக்கப் படாமல், இறைவன் திருவருளால் தொன்று தொட்டு வரும் ஒரே சமயம் சைவ சமயம் ஆகும்.
சைவ சமயம் மட்டுமே அநாதியானது. சைவ சமயத்தைத் தழுவியோ, எதிர்த்தோ, பகுதியாகக் கொண்டோ, உலகில் பல சமயங்கள் தோன்றி அழிந்துள்ளன. உலகின் அனைத்து சமய தத்துவங்களும் சைவத்திற்குள் அடக்கம். 
 
எனவே,, சைவ சமயமே சமயம். அத்தகைய சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. தமிழே இசை.
இசையே சிவம் என்பர். பண்டைய காலங்களில் இசை நம் அன்றாட வாழ்வோடு மிக்க பிணைந்திருந்தது. அத்தகைய இசையில் இணையில்லாதது கயிலாய வாத்தியம் என அழைக்கப்படும் சிவ வாத்தியம்.
இது எல்லையற்ற பரம்பொருளாகிய முழுமுதற் கடவுள் சிவபெருமானுக்காக மட்டுமே சிவனடியார்களால் இசைக்கப் பெறுவது. அனைத்து சிவன் கோவில்களிலும் தொன்று தொட்டு இசைக்கப்பட்டு வருகிறது
. இன்றும் ஈசன் திருவருளால் இந்த இசை பெருகி வருகிறது.
திருஉடல், பிரம்மதாளம், திருச்சின்னம், எக்காளம், தாரை, நெடுந்தாரை, சங்கு, கொம்பு, கொக்கரை ஆகிய பண்டைய இசைக் கருவிகளைக் கொண்டு வாசிக்கும் வாத்தியம் கயிலாய வாத்தியமாகும். இதை பஞ்ச வாத்தியம் என்றும் கூறுவர். 
 
இதில், திருஉடல் என்பது மேளம் போன்ற வடிவில் இருக்கும். இருபுறமும் தோலினால் ஆன கருவி. பிரம்மதாளம் என்பது பொற்றாளம் போல், பெரிய வடிவில் இருக்கும். திருச்சின்னம், எக்காளம், தாரை, நெடுந்தாரை, கொம்பு, கொக்கரை ஆகியவை குழல் வாத்தியங்கள்.
இந்த குழல் கருவிகள் எம்.எஸ்.ஸ்டீல் என்ற உலோகத்தில் தயாரிக்கப்படுகின்றன. மற்ற கருவிகளை விட மிகவும் பழமையானது கொக்கரை. 
 
இவற்றில் சங்கு குறிப்பிடத்தக்கது, சங்கநாதம் மங்களகரமானது. தமிழகத்தில் அதை பற்றி, வேறு பார்வை எப்படியோ ஏற்பட்டு விட்டது. திருஞானசம்பந்தர் செல்லும் இடங்களில் எல்லாம், சங்கநாதம் முழங்கியதாக, பெரியபுராணத்தில் குறிப்பு உள்ளது.
கயிலாய வாத்தியத்திற்கு தனி பாடாந்தர இசை கிடையாது. சந்தத்தின் அடிப்படையில் மட்டும் வாசிக்கப்படுகிறது. யாவரும் எளிதில் கற்று கொள்ள முடியும். ஆனால், இசைப்பது கடினம். ஆர்வம் இருந்தால் மட்டுமே இசைக்க முடியும். 
 
கயிலாய வாத்தியம் முழுக்க முழுக்க தாளத்தின் அடிப்படையிலேயே இசைக்கப் படுகிறது. கயிலாய வாத்தியங்களிலிருந்து வரும் இசை நம்மை பரவசப்படுத்தும். நம் உள்ளத்தில் இருக்கும் நுணுக்கமான உணர்வுகளைத் தூண்டி, நம் இறை சிந்தனையை ஒருமிக்க உதவும். இது பிறப்பு இறப்பு இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானின் பெருமைகளையும் தன்மைகளையும் இசையின் மூலமாகவே நமக்கு உணர்த்தும். இந்த இசையைக் கேட்டு,நம் கண்களை மூடிக் கொண்டு சிவசிவ அரகர சிவசிவ அரகர என்று கூறிக் கொண்டே இருந்தால் நம் மனது மிக வேகமாக ஒருமைப்படும். இசைக்கப்படும் ஒலியின் அதிர்வுகளே, சிவனின் பாதங்களில் நாம் அடிபணியும் அனுபவத்தைத் தருகின்றன. 
 
பித்தளை மற்றும் வெண்கலத்தால் ஆன இக்கருவிகளின் பெயர் ‘திருக்கயிலாய இசைக்கருவிகள்’ என்றும், இக்கருவிகள் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்தவை.
கொக்கரை, எக்காளம், தவண்டை, கொடு கொட்டி, நகரா என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும் இந்த இசைக்கருவிகள் ஒவ்வொன்றும் சிவாலயங்களிலே ஒருகாலத்தில் சிவ நாதமாக ஒலித்துக் கொண்டிருந்தவை. யாழ், உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு போன்று காலத்தால் மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, இன்னும் சொல்லப்போனால் திட்டமிட்டே ஒதுக்கப்பட்ட நம் தமிழ் மண்ணின் பாரம்பரிய இசைக்கருவிகள்தான் இவை.
துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம் உழைஇளி
ஓசைபண் கெழுமப்பாடிச் சச்சரி கொக்கரை தக்கையோடு
தகுணிதம் துந்துபி தாளம்வீணை மத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங் குடமுழா மொந்தை வாசித் தத்தனை விரவினோ டாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே
– என காரைக்கால் அம்மையார் 11-ம் திருமுறையில் இக்கருவிகள் பற்றிப் பாடியுள்ளார். 70-க்கும் மேற்பட்ட இந்த இசைக்கருவிகளின் பயன்பாடு சோழர்களின் காலத்துக்குப் பிறகு, படிப்படியாக குறைய ஆரம்பித்தன. அதற்குப் பிறகு வந்த மன்னர்களும் பெரிய அளவில் இக்கருவிகளை ஆதரிக்காமல் விட்டுவிட, பின்னர்
வெளிநாட்டு இசைக்கருவிகளின் மோகத்தால் முற்றிலுமாக அழியும் நிலைக்குச் சென்றுவிட்டது. 
 
தற்போது இந்த வகையில் 30-க்கும் குறைவான இசைக்கருவிகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. எழும்பூர் அருங்காட்சியகத்திலும் திருக்கயிலாய இசைக்கருவிகள் இடம் பெற்றிருக்கின்றன.
 
இக்கருவிகளின்பால் ஈர்க்கப்பட்டு, இது பற்றி ஆராய்ந்து முழுமையாகத் தெரிந்து கொண்ட புதுச்சேரியைச் சேர்ந்த சிவதிரு இராமலிங்கம் ஐயா என்பவர், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் பலனாக, இன்று தமிழ்நாட்டில் பரவலாக 30-க்கும் மேற்பட்ட சிவ தலங்களில் திருக்கயிலாய இசைக் கருவிகளை இசைக்கும் குழுக்கள் உருவாக்கப்பட்டு, இசைக் கருவிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஆங்காங்கே சிவாலயங்கள், திருமுறை ஊர்வலங்கள், குடமுழுக்கு திருவிழாக்கள், திருவாசகம் முற்றோதுதல் என சிவனைச் சார்ந்த அத்தனை விழாக்களிலும் இக்குழுக்களின் திருக்கயிலாய இசைக்கருவிகள் முழங்கி, சிவனடியார்களைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. 
 
சிவாலயங்கள் இல்லாமல் வேறு எங்கேனும் இந்த இசைக் கருவிகளை இசைக்க நேரிடும்போது, சிவபெருமானின் திருவுருவத்தை வைத்து வழி பட்ட பிறகே இசைக்கத் தொடங்குகிறார்கள். இது முழுக்க முழுக்க பிறப்பில்லாத சிவபெருமானுக்காக இசைக்கப் படுவது தெளிவு.
மேலும், பாழடைந்து கிடக்கும் கோயில்களில் திருக்கயிலாய இசைக்கருவிகளை இசைத்தால், விரைவிலேயே அங்கு குடமுழுக்கு நடைபெறும் என்பது தொன்றுதொட்டு நிலவி வரும் நம்பிக்கை.
இக்கருவிகளை இசைக்கும் அடியார்கள், இதை இசைக்கும்போது, தங்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வு கிடைப்பதோடு மட்டுமல்லாமல், தம் சொந்த வேலைகளில் உற்சாகமாக இயங்குவதற்கான ஆற்றலும் கிடைக்கிறது என்கிறார்கள். இக்கருவிகளை இசைக்கும் சிவனடியார்களின் மனதில் இருக்கும் ஒரே எண்ணம், இந்தத் திருக்கயிலாய இசை உலகம் முழுவதிலும் ஒலிக்க வேண்டும், 
 
சாம கான பிரியனான அந்த ஆதி சிவனுக்கே உரிய இசைக் கருவிகளின் அடையாளத்தை இவ்வுலகம் உணர வேண்டும் என்பதுதான்.

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم