வடவேங்கடவன்
ஒரு கூனன், ஒரு குருடன், ஒரு முடவன், ஒரு ஊமை இப்படி நான்கு பேர்கள் ஒரு மலை ஏறுகிறார்கள். மலை என்றால் ஏதோ இமயத்தின் சிகரத்தைப் போன்று நீண்டு உயர்ந்த மலை அல்ல. சின்னஞ்சிறிய மலைதான்.
அந்த மலைமீது ஒரு கோயில். அந்தக் கோயிலிலே ஒரு தெய்வம். அந்த தெய்வத்திடம் அசையாத நம்பிக்கை மக்களுக்கு; கேட்கும் வரத்தையெல்லாம் அளிக்க வல்லது என்று.
ஆதலால் வாழ்க்கையில் இந்த ஊனுடம்பில் ஏற்பட்ட குறை காரணமாகத் துயருகிறவர்கள் நால்வர் மலை ஏறுகிறார்கள்.
இவர்களைப் போல், உடம்பில் குறை இல்லாவிட்டாலும், உள்ளத்தில் குறையுடையவர்கள் பலரும் மலை ஏறுகிறார்கள்
திடீரென்று ஓர் அதிசயம் நிகழ்கிறது.
அங்கே கூனிக் குறுகிக் கோலூன்றி நடந்தவன், கூன் நிமிர்ந்து ஓடவே தொடங்கி விடுகிறான்.
குருடன் கண்கள் திறந்து விடுகின்றன. அவன் கண்கள் ஒளி பெற்று நிமிர்ந்து வளைந்திருக்கும் கொம்பொன்றில் தொங்கிக் கொண்டிருக்கும் தேன் கூட்டைப் பார்த்து, ‘அதோ தேன், அதோ தேன்!’ என்று மற்றவர்களுக்குக் காட்டுகிறான்.
அதுவரை நொண்டியாய் முடமாய்த் தட்டுத் தடுமாறி மலை ஏறிய முடவனோ, குருடன் காட்டிய தேன் கூட்டை எடுக்க, மரத்தின் மேலேயே ஏற ஆரம்பித்து விடுகிறான். அவ்வளவுதான்.
அதுவரை வாய் பேசாது ஊமையாய்ப் பக்கத்தில் சென்றவனோ, ‘எடுக்கும் தேனில் எனக்குக் கொஞ்சம்!’ என்றே வாய்விட்டுக் கேட்கிறான்.
இப்படியே கூனன், குருடன், முடவன், ஊமையாக இருந்த நால்வரும் தங்கள் தங்கள் குறை நீங்கியவர்களாய் ஓடுகிறார்கள்.
மலைமேல் நிற்கும் வடவேங்கடவன் என்னும் மாதவனின் திருவடிகளில் சென்று வீழ்ந்து வணங்கி எழுவதற்கு.
அத்தனையையும் பார்த்துக் கொண்டிருக்கிறார், ஒரு கவிஞர். அவரும் மலை ஏறுகிறவர்களில் ஒருவர்தான். அவர் உள்ளத்திலும் ஏதோ குறை. அதற்குப் பிரார்த்தனை செய்து கொண்டே ஏறுகிறார் மலை மேலே.
அவருக்கு அந்த நிகழ்ச்சியை, அந்த அற்புதத்தைக் கண்டு ஒரே வியப்பு. வியப்பை விட மலை மேல் இருக்கும் மாதவனிடத்திலேயே ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையிலே பிறக்கிறது, ஒரு பாட்டு. பாட்டு இதுதான்:
கூன்கொண்டு சென்றவன் கூன் நிமிர்ந்து ஓட,
குருடன் கொம்பில்
தேன் என்று காட்ட,
முடவன் அத்தேனை
எடுக்க, அயல்
தானின்ற ஊமை எனக்கென்று கேட்க
தருவன் வரம்
வான் நின்ற சோலை வடமலைமேல் நின்ற
மாதவனே.
திருப்பதி வாழ் வேங்கடவன் ரிக்வேதத்திலேயே இடம் பெற்றிருக்கிறான் என்பர்.
திருமந்திரம் பாடிய திருமூலரும், திருவந்தாதி பாடிய கபிலதேவ நாயனாருமே இந்த வேங்கடத்து மேயானைப் பாடி இருக்கிறார்கள்.
தொண்டர் அடிப்பொடியைத் தவிர மற்றைய ஆழ்வார்கள் எல்லாரும் மங்களா சாஸனம் செய்திருக்கிறார்கள்.
தொண்டைமான் சக்ரவர்த்திதான் இந்தக் கோயிலை எடுப்பித்தவர் என்று வேங்கடாசல மாகாத்மியம் கூறும்.
பல்லவர், சோழர், பாண்டியர், யாதவர் முதலிய அரசர் பெருமக்கள் எல்லாம் கோயிலை விஸ்தரித்திருக்கிறார்கள் என்றாலும், விஜயநகர மன்னர்கள் காலத்தில்தான் கோயிலின் செல்வம் பல்கிப் பெருகி இருக்கிறது.
சாளுவ நரசிம்மனின் பெரிய பாட்டனான சாளுவ மங்கதேவனே விமானத்துக்குத் தங்கத் தகடு வேய்ந்திருக்கிறான்.
கிருஷ்ண தேவராயனும் அச்சுததேவராயனும் பல துறைகளில் கோயிலை வளப்படுத்தி இருக்கிறார்கள்.
إرسال تعليق