பூமிநாதர் கோவில்

 

திருதலம் : பூமிநாதர் கோவில்
*🚩அமைவிடம்: திருச்சி மண்ணச்சநல்லூரில் உள்ளது பூமிநாதர் கோவில். இந்த கோவில் இறைவன் பூமிநாதசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
🚩திருதலத்தின் அமைப்பு :
வாஸ்து தோஷங்களை நீக்கும் சக்திவாய்ந்தவராக, மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதர் கோவிலில் அருளும் பூமிநாதசுவாமி இருக்கிறார். இந்த ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.
ராஜகோபுரத்தைக் கடந்ததும் கொடிமர விநாயகரும், நந்தியும் அருள்கின்றனர். அடுத்து கொடிமரம், நந்தி, பலிபீடம் காணப்படுகிறது.
கொடிமர மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு சூரியன் நடுநாயகமாக இருக்க, மற்ற கிரகங்கள் சூரியனைப் பார்த்த நிலையில் வீற்றிருக்கின்றன.
தவிர ராகு - கேது கிரகங்கள் முழு மனித உருவத்தில் இங்கு அருள்பாலிப்பது அபூர்வ அமைப்பாகக் கருதப்படுகிறது. மகாமண்டப நுழைவு வாசலில் இடது புறம் விநாயகரும், வலது புறம் முருகனும் அருள்கிறார்கள்.
அதைத் தாண்டி உள்ளே சென்றால் வலதுபுறம் அன்னை தர்மசம்வர்த்தினி, தனிச் சன்னிதியில் அருள்கிறார். நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி இருக்கும் இந்த அன்னையின் முன்பு, மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகா மண்டப கிழக்கு திசையில் சூரிய- சந்திரர்கள் உள்ளனர்.
அர்த்த மண்டபத்தை தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன் பூமிநாதசுவாமி, லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
சாபம் பெற்ற இந்திரன், இத்தல இறைவனை ஆராதித்து பாவ விமோசனம் பெற்றான். 16 வித தோஷங்களை இத்தல இறைவன் நீக்குவதாக, அகத்தியர் தனது ஓலைச்சுவடியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆலயத்தின் தல விருட்சம் இரண்டு. ஒன்று வில்வம், மற்றொன்று வன்னி மரம். இவை ஆலய கிழக்கு பிரகாரத்தில் உள்ளன. மார்கழி முதல் ஞாயிறு அன்று இத் தலத்தில் மகா ருத்ர யாகம் நடை பெறுகிறது. இந்த யாகத்தில் 1008 மூலிகைகள், பலவித தானியங்கள் இடப்படுகிறது. இந்த யாகத்தின் சாம்பல், வன்னி மரத்தடியில் கொட்டப்படுகிறது.
🚩திருதலத்தின் வழிபாடு:
வாஸ்து சம்பந்தமாக அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யக் கூடியவராக இத்தல இறைவன் பூமிநாத சுவாமி விளங்குகிறார். தோஷம் விலக சில வரைமுறைகள் இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன.
வீடுகட்ட விரும்புவோர், தன் வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள், வீட்டின் அல்லது மனையின் வடகிழக்கு மூலையில் மூன்று பிடி மண் எடுத்து, அதை மஞ்சள் துணியில் கட்டி ஆலயம் கொண்டு வருகின்றனர். அந்த மண் அர்ச்சனை தட்டில் பூ, பழங்கள், மாலையுடன் வைத்து, இறைவனுக்கு அர்ச்சிக்கப்படுகிறது.
அர்ச்சனை முடிந்தபின் ஆலயத்தை வலம் வர வேண்டும். முதல் சுற்றின்போது, மண்ணில் ஒரு பிடியை ஆலய தல விருட்சமான வில்வ மரத்தடியில் போட வேண்டும்.
இரண்டாம் சுற்றின்போது, மற்றொரு பிடி மண்ணை வன்னி மரத்தடியில் போடுகிறார்கள். அப்போது மகா ருத்ர யாகம் செய்த சாம்பலில் ஒரு பிடி எடுத்து தங்கள் கையில் இருக்கும் துணி முடிப்பில், எஞ்சிய ஒரு பிடி மண்ணோடு சேர்த்து வைத்துக் கொள்கின்றனர்.
மூன்றாவது முறை ஆலயத்தை வலம் வந்து நவக்கிரக நாயகர்களை வழிபடுகிறார்கள். வீட்டிற்கு வந்ததும், மண்ணோடு கலந்த சாம்பலை வீட்டின் பூஜை அறையில் வைத்து விடுகிறார்கள்.
5 நாட்களுக்குப் பின்னர், அதில் பாதியை எடுத்து மண் எடுக்கப்பட்ட இடத்தில் போட வேண்டுமாம். அப்படி செய்தால் மூன்று மாதங்களுக்குள் நினைத்தது நடக்கும் என்கிறார்கள்.
🚩திருத்தலம் திறந்திருக்கும் நேரம்:
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
*🚩திருதலத்திற்கு செல்லும் வழி:
திருச்சியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்ணச்சநல்லூரில் சாலை அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
சிவாய நம 🙏
திருச்சிற்றம்பலம் 🙏🏻
சர்வம் சிவமயமே 🙏🏻
எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும் 🙏🏻
அனைவருக்கும் சிவனருள் கிடைக்கட்டும் 🙏🏻
உலகாளும் அம்மையப்பன் திருவருளுடன் அனைவருக்கும் இனிய சிவகாலை வணக்கங்கள் 🙏🏻
ஆலவாயர் அருட்பணி மன்ற தந்தையே வணக்கங்கள்

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم