How Law of Attraction Works : ஈர்ப்பு விதி எப்படி வேலை செய்கிறது
Law of Attraction in Tamil - ஈர்ப்பு விதி : ஈர்ப்பு விதி என்றால் என்ன? ஈர்ப்பு விதியைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஈர்ப்பு விதி உண்மையிலேயே வேலை செய்யுமா? ஈர்ப்பு விதி எப்படி செயல்படுகிறது?
ஈர்ப்பு விதி ஒரு சிக்கலானதோ, மாயம் நிறைந்த சடங்கோ அல்லது மர்மமான பண்டைய கால ரகசியமோ அல்ல. ஈர்ப்பு விதி உண்மையில் மிக மிக எளிமையான ஒன்று.
புவி ஈர்ப்பு விதியை எடுத்துக்கொள்வோம். அது பிரபஞ்சத்தின் மாற்ற முடியாத ஒரு புவி ஈர்ப்பு விசை. ஒரு பந்தை வானத்தை நோக்கி எறிந்தால், எப்படி பூமியை நோக்கி வருகிறதோ, ஒருவர் மாடியின் மேலிருந்து குதித்தால் எப்படி பூமியின் தரையில் வந்து விழுகிறாரோ, அது தான் புவி ஈர்ப்பு விதி.
ஈர்ப்பு விதியும் அதைப் போன்று தான். நம் வாழ்க்கையில் நாம் கவனம் செலுத்துகின்ற எதையும், ஈர்க்கும் திறன் தான் ஈர்ப்பு விதி. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், எல்லா எண்ணங்களும் இறுதியில் நிகழ்வுகளாக மாறும் என்பதுதான் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி.
(Law of Attraction) ஈர்ப்பு விதியைப் புரிந்து கொள்ள எடுத்துக்காட்டாக - நம் வாழ்வில், மக்கள், பொருட்கள், இனக்கமான கருத்துக்கள், வளங்கள், செல்வம் போன்றவைகள், உங்கள் இடைவிடாத ஆதிக்கச் சிந்தனையினால் எப்படி கிடைக்கப் பெறுகிறோமோ அது தான் ஈர்ப்பு விதி.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒருவர் தன் வாழ்வில் ஒரு இலட்சியத்தை, இலட்சியம் சிறியதாக இருந்தாலும் சரி பெரியதாக இருந்தாலும் சரி, அந்த இலட்சியத்தை அடைய, அந்த இலட்சியத்தைப் பற்றிய தொடர்ந்த இடைவிடாத சிந்தனைகளோடு, அதை என்னால் அடைய முடியும், அந்த இலட்சியத்தைக் கண்டிப்பாக நான் அடைவேன் என்ற நேர்மறையான சிந்தனைகளோடு செயல்பட்டு எப்படி அந்த இலட்சியத்தை தன்னுள் ஈர்த்து எப்படி அடைகிறாரோ, அதுதான் ஈர்ப்பு விதி.
முதலில் நீங்கள் சிறப்படைந்தால் தான் உங்கள் வாழ்க்கை சிறப்படையும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு நிறுவனத்தின் சிறந்த தலைவராக வேண்டுமென்றால், முதலில் நீங்கள் சிறப்பாக செயல்படவேண்டும்.
ஆகவே, உங்கள் எண்ணங்களைப் பொறுத்தே, நீங்கள் நல்லவைகளை ஈர்க்கிறீர்களா அல்லது கெட்டவைகளை ஈர்க்கிறீர்களா என்பது முடிவாகும். நீங்கள் நேர்மறையான சிந்தனையோடு நல்ல எண்ணங்களோடு செயல்பட்டால் நல்லவைகளை ஈர்ப்பீர்கள். எதிர்மறையான சிந்தனையோடு கெட்ட எண்ணங்களோடு செயல்பட்டால் கெட்டவைகளைத்தான் ஈர்ப்பீர்கள். எனவே நேர்மறையான எண்ணங்களுடன் நல்ல விஷயங்களை ஈர்க்க முயற்ச்சிக்க வேண்டும்.
ஈர்ப்பு விதி:
------------
ஈர்ப்பு விதியில் ஆழ்மனதின் பங்கு மிகப்பெரியது. ஆழ்மனம் எப்படி செயல்படுகிறது என்பதை சில எடுத்துக்காட்டுகள் மூலம் பார்க்கலாம்.
1. நீங்கள் ஒரு வாகனத்தை வாங்க ஆசைப்பட்டிருப்பீர்கள். அந்த வாகனத்தை நீங்கள் வாங்கி ஓட்டுவதைப்போல எண்ணங்கள் ஒடியிருக்கும். அந்த வாகனத்தை நீங்கள் பயன்படுத்துவதைப் போல எண்ணம் தோன்றியதற்குப் பின் முன்பில்லாத அளவுக்கு அடிக்கடி அந்த வாகனம் தானாக உங்கள் பார்வையில் பட்டிருக்கும். இது எப்படி நடந்தது.
அந்த வாகனம் ஏற்கனவே சாலைகளில் நிறைய ஓடிக்கொண்டிருந்தும் நீங்கள் அதை கவனிக்கவில்லையா அல்லது நீங்கள் அந்த வாகனத்தை வாங்கி பயன்படுத்தியதாக எண்ணிய பின் நிறைய வாகனங்கள் கண்ணில் பட்டதா?
ஆம். அந்த வாகனம் உங்கள் ஆழ்மனதில் பதிந்ததால்தான் அடிக்கடி உங்கள் கண்ணில் பட்டது என்பதே உண்மை.
2. ஓர் இருள் சூழ்ந்த இரவு. அளவு கடந்த இடி மின்னலுடன் மழை பெய்கிறது. கணவன் அதைப்பார்த்து மனைவியிடம், பார் எப்படி படுபயங்கரமாக உள்ளது இந்த காட்சி என்கிறார். அதை கேட்ட மனைவி, இல்லையே பாருங்கள், அழகான மின்னல் ஒளியுடன் சாரல் மழை பொழிவது எவ்வளவு ரம்மியமாக உள்ளது என்கிறார்.
இப்பொழுது யார் சொல்வது சரி. ஒருவரின் பார்வையில் பயங்கரமாக உள்ள அதே காட்சி மற்றொருவரின் பார்வையில் ரம்மியமாக உள்ளது.
எனில், நம் எண்ணங்களைப் பொருத்தே பிரபஞ்சம் நம்மிடம் செயல்படுகிறது.
நீங்கள் எதை எதிர்ப்பார்க்கிறீர்களோ, எது உங்கள் ஆழ்மனதில் பதிகிறதோ, உங்கள் ஆழ்மனதில் பதிந்த எந்த காட்சி ஆற்றலாக பிரபஞ்சத்தை அடைகிறதோ, அதைத்தான் பிரபஞ்சம் நிகழ்வுகளாக நமக்கு திருப்பி அளிக்கும்.
உங்கள் எதிர்மறையான எண்ணங்களை, நீங்கள் உங்களுக்குள் மட்டும் வைத்துக்கொள்ளாமல் அதை மற்றவர்களுக்கும் எப்படி பரப்புகிறீர்கள் என்பதை பார்ப்போம்.
நாள்தோறும் உங்கள் பணியை முடித்து வீடு திரும்பியதும் உங்கள் மனைவியிடம், இது என்ன வேலை, இது ஒரு மோசமான வேலை, இது மிகக் கொடுமையானது என்று எதிர்மறையான ஆற்றலை உங்களுக்குள் மட்டும் வைத்துக் கொள்ளமல் உங்கள் மனைவிக்கும் எதிர்மறையான ஆற்றலை பரப்புகிறீர்கள். மனைவிக்கு மட்டுமல்ல, உங்கள் வீட்டில் உள்ள அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை என்று எல்லோருக்கும் பரவுகிறது. இதே போன்று உங்கள் நண்பர்களுக்கும் பரவுகிறது. அவர்கள் அதை மற்றவர்களிடம் பரப்புகிறார்கள்.
உங்கள் எண்ணங்களில் உள்ளதையே நீங்கள் ஈர்க்கிறீர்கள். நல்லவற்றை ஈர்ப்பதா அல்லது கெட்டவற்றை ஈர்ப்பதா என்பது உங்களிடம் தான் உள்ளது.
சரி, நீங்கள் நல்லவற்றையே ஈர்க்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
நான் நல்ல மனிதனாக வாழ வேண்டும், வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும், நிறைய பணம் வேண்டும் என்று, இப்படி எல்லாவற்றையும் வேண்டும் வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால், வாழ்க்கை முழுவதும் வேண்டும், வேண்டும் என்று வேண்டிக்கொண்டே தான் இருப்பீர்கள். நான் பணக்காரன் ஆவேன், கார் வாங்குவேன் என்று எதிர் காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்க்கை முழுவதும் நினைத்துக் கொண்டே தான் இருப்பீர்கள். அதை நீங்கள் என்றுமே ஈர்க்க முடியாது.
ஒன்றை நீங்கள் இந்த பிரபஞ்சத்தில் இருந்து ஈர்க்க வேண்டுமென்றால், எதிர்காலத்தில் இதெல்லாம் நடக்கும் என்று எண்ணுவதை விட்டுவிட்டு அனைத்தும் நிகழ்காலத்தில் நடப்பதை போல எண்ண வேண்டும். உங்களுக்கு வீடு தேவையென்றால், வீட்டை வாங்கி அந்த வீட்டில் நீங்கள் வாழ்வதைப் போல ஆழ்மனதில் உணர வேண்டும். இதே போல எல்லாவற்றையும் நிகழ் காலத்தில் நடப்பதைப் போல ஆழ்மனதில் உணர வேண்டும். இப்படி நீங்கள் செய்யும் பொழுது நிச்சயமாக இந்த பிரபஞ்சத்தில் இருந்து நீங்கள் ஈர்க்க நினைக்கும் எதையும் சுலபமாக ஈர்க்க முடியும்.
ஆகவே நீங்கள், உங்கள் வாழ்க்கையில் சாதிக்க விரும்பும் எது ஒன்றையும் சாதிக்க விரும்பிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு அதை நீங்கள் சாதித்து விட்டதாகவே உங்கள் ஆழ்மனதிற்கு தெரியப்படுத்துவதன் மூலம் நீங்கள் நினைக்கும் எதையும் சாதிக்கலாம்.
இதைத்தான் மதிப்பிற்குரிய ஐயா அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று சொன்னார்.
ஆகவே நல்ல எண்ணங்களை நினைத்து, நல்ல ஆற்றலை பிரபஞ்சத்திற்கு செலுத்தி, மற்றவர்களுக்கும் நல்ல ஆற்றலையே பரப்பி, நல்லவற்றை ஈர்த்து நல்வாழ்வு வாழ்வோம்.
நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.
إرسال تعليق