இருப்பிடம் கேட்ட கலிபுருஷன்

 


இருப்பிடம் கேட்ட கலிபுருஷன் 

 தரும புத்திரரால் முடிசூட்டப்பட்ட பரீக்ஷித்து, தன் முன்னோர்கள் பெயர் விளங்கச் சிறந்த முறையில் ராஜ்யபரிபாலனம் செய்து வந்தான். உத்தரனுடைய பெண் இராவதியை மணந்து கொண்டான். அவருக்கு ஜனமேஜன் 

முதலான நான்கு குமாரர்கள் பிறந்தார்கள். 

 குரு கிருபாசார்யாரை வணங்கி அவர் ஆசியுடன் மூன்று கால்களை இழந்து ஒற்றைக் காலில் நிற்கும் ரிஷபத்தையும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் பசுவையும் பார்த்தான். ராஜலக்ஷணங்களோடு கூடிய மனிதன் ஒருவன் அவற்றை அடிப்பதையும் கண்டான். பார்த்த மாத்திரத்திலேயே அவன் கலிபுருஷன் என்பதை பரீக்ஷித்து அறிந்து கொண்டான். பெரும் சீற்றத்துடன் கையில் அம்பை எடுத்தான்.


 ஒற்றைக் காலுடன் நின்ற ரிஷபம் தர்மதேவதையாகும். கிருதயுகத்தில் அதற்கு நான்கு கால்கள், திரேதாயுகத்தில் தர்மம் குறையவே ஒருகாலை இழந்து மூன்று கால்களை உடையதாக இருந்தது. துவாபர யுகத்தில் மற்றொரு காலையும் இழந்தது. கலியுகத்தில் கலிபுருஷனிடம் அதர்மம் மிஞ்சி இருக்கவே மேலும் ஒருகாலை இழந்து ஒற்றைக் காலுடன் நின்றது. கலிபுருஷன் ஆதிக்கத்தைக் கண்டு மனம் பொறாத பூமிதேவதையான பசு கண்ணீர் விட்டு அழுதது. பசுவாகிய பூமிதேவியைப் பார்த்து தர்ம தேவதை கேட்டது.


"ஹே பூமிதேவி, உன் உடல் வாடியிருப்பதன் காரணம் என்ன? முகம் சோகம் நிரம்பியதாக இருக்கிறதே. கலியினுடைய ஆதிக்கத்தால் கால்களை இழந்து ஒற்றைக் காலுடன் நிற்கும் நீ கர்மாக்கள் குறைந்துவிட்டதால் தேவர்களுக்குரிய அவிர்பாகம் கிடைக்கவில்லையே என அவர்களைப் பார்த்து வருத்தப்படுகின்றாயா? இனி நாட்டில் பிதா-குழந்தைகளையும் கணவன்-மனைவியையும் ரக்ஷிக்கப் போவதில்லை என்பதைக் குறித்துச் சங்கடப்படுகின்றாயா? உனக்கேற்பட்ட சுமையைக் குறைக்க அவதரித்த பகவான் தம் வேலையை முடித்துக்கொண்டு புறப்படுகையில் உன்னை விட்டுவிட்டுப் போய்விட்டாரே என வருத்தப்படுகிறாயா?"


 தர்மத்தின் கேள்விகளுக்கு பசு கண்ணீர் விட்டபடி பதில் அளித்தது. 

"தர்ம பிரபோ, நீ சொல்வது அனைத்தும் உண்மையே. எந்த மக்களுக்கு நன்மையை அளிக்க நீ இருக்கின்றாயோ அந்த மனிதர்களே உன்னை நினைக்காது இருப்பதை எண்ணும்போது என் சோகம் அளவிட முடியாததாக ஆகின்றது". இவ்வாறு அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது பரீக்ஷித்து அங்குவந்து சேர்ந்தான். கையிலெடுத்த அம்பை வில்லிலே பூட்டியபடி, "ஹே மானுடா நீ யார்? என் நாட்டிலே ஒரு காரணமுமின்றி பிறர் ஹிம்சைக்கு உள்ளாவதை நான் அனுமதிக்க மாட்டேன். வைகுண்டநாதனான ஸ்ரீகிருஷ்ணரும் காண்டீபத்தை உடைய அர்ஜுனனும் இல்லையென்ற காரணத்தால் எளியாரை இம்சிக்கத் தொடங்குகிறாயா? உன் தோற்றமோ அரசனைப்போல இருக்கிறது. உன் செய்கையோ கீழ்த்தரமாக இருக்கிறது. நீ யார்? என்பதைச் சொல். ஒரே காலில் மட்டும் நிற்கும் ரிஷபமே நீ யார்? என்னைச் சோதிக்க வேண்டிய மாய உருவெடுத்து வந்துள்ள தேவர்களா நீங்கள்? கோபாலன் இருந்தவரை எந்தப் பிராணியும் கண்ணீர் விட்டதில்லையே. பசுவே உன் கண்ணீர் பெருகக் காரணம் என்ன? உங்களை அந்த மானிடமிருந்து நான் காப்பாற்றுவேன். அதைரியம் வேண்டாம். 


 எந்த அரசனுடைய நாட்டில் தர்ம விரோதிகளால் பிரஜைகள் துன்பப்படுகின்றனரோ அவனுடைய புகழும், ஐசுவரியமும், ஆயுளும் நசிந்து விடுகின்றன. துன்பப்படுகின்ற குடிமக்களின் கஷ்டத்தைப் போக்குவதுதான் அரசனுடைய தர்மமாகும்" என்று கர்ஜித்தான் பரீக்ஷித்து.

அப்போது தர்மதேவதை அரசனைப் பார்த்து, "ஹே ராஜன், நல்ல வார்த்தைகளைத்தான் கூறினாய். பாண்டுவின் வம்சத்தில் வந்த நீ, உன் முன்னோர்களைப் போன்றே துன்பத்தில் சிக்கியுள்ள பிராணிகளுக்கு அபயம் தரும் வார்த்தைகளைச் சொன்னாய். நாங்களோ எந்த புருஷனிடமிருந்து எங்களுக்குத் துன்பம் உண்டாக்கக்கூடிய காரணங்கள் ஏற்பட்டனவோ அந்தப் புருஷனை அறியோம். நீயே உனது புத்தியால் அறிந்துகொள்" என்று சொல்லிற்று. பரீக்ஷித்து ரிஷபமாகிய தர்ம தேவதையின் வார்த்தைகளைக் கேட்டுச் சிறிது யோசித்தவனாய் அதைப் பார்த்துச் சொன்னான்.


 "ஹே தர்மபுருஷா, கெடுதல் செய்தவனை அறிந்திருந்த போதிலும் அதனை நேரில் குறிப்பிடலாகாது என்ற தர்மத்தின்படி அமைந்திருக்கிறது உன் பேச்சு. ஆகவே ரிஷப ரூபத்தில் வந்திருக்கும் தர்மதேவதையாக உன்னை எண்ணுகிறேன். தவம், சௌசம், தயை, ஸத்யம் இந்நான்கும் தர்மத்தின் பாதங்கள் எனச் சொல்லப்பட்டுள்ளன. கர்வம், ஸ்திரீலோலம், மதம் ஆகிய அதர்ம அம்சங்களினால் உன் மூன்று பாதங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது ஸத்யமாகிய ஒரே பாதம் தான் உன்னிடம் எஞ்சியிருக்கிறது. அதையும் கலியில் பொய் எனப்படும் அதர்மம் அழிக்க விரும்புகிறது. அதேபோல் இங்கே நிற்கும் பசுவைப் பூமாதேவி அவர் வைகுந்தம் ஏகிவிட்டதால் துயரம் கொண்டு இனி பிராமண பக்தியற்றவர்களும் க்ஷத்ரியர் போல வேஷம் போடுபவர்களான கீழோரும் உன்னை அனுபவிக்கப் போகின்றனரே என்று கண்ணீர் விடுவதாகவே என் புத்திக்கு எட்டுகிறது" என்றான் அரசன்.


 பின்னர் அவர்கள் பக்கத்தில் நிற்கும் மானிடனைப் பார்த்து, "அடே மானிடா, உன் வேஷம் வெளிப்பட்டுவிட்டது. இத்தனைக்கும் காரணமான நீ வேறு யாருமில்லை. அதர்மத்தை மித்திரனாகக் கொண்ட கலிபுருஷனே! உன்னை இப்போதே ஒழித்து விடுகிறேன்" என்று கூறியவனாய் அம்பை வில்லில் பூட்டி, நாணை இழுத்தான். அரசன் பிரயோகிக்க இருக்கும் அஸ்திரத்திலிருந்து தப்ப முடியாதென்பதைக் கண்ட அம்மனிதன் வெலவெலத்துப் போய் வாய் குமுறத் தன்னுடைய உண்மையான வடிவை எடுத்துக் கொண்டு, "ஹே ராஜன், அபயம் அருள வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு நெடுஞ்சான் கிடையாகத் தரையில் விழுந்தான். துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனத்தில் பலராலும் புகழப்பட்ட பரீக்ஷித்துராஜன் தன் கால்களைச் சரணம் என்று பிடித்தவனைக் கொல்வது தர்மத்துக்கு விரோதம் என்று அறியமாட்டானா! வில்லிலே பூட்டிய அம்பைக் கையிலெடுத்துக் கொண்டு, அர்ஜுனனுடைய கீர்த்தியைப் பெருமையுடன் தாங்கி வரும் என்னிடம் அபயம் எனச் சரணடைந்தவனுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது. இதைத் தெரிந்துகொள். பயப்பட வேண்டாம். ஹே கலிபுருஷா ஸத்யத்தை நடத்திவரும் என் நாட்டில் அதர்மத்திற்கு இடமில்லை. ஆகவே என் நாட்டைவிட்டு உடனே வெளியேறிவிடு. என் ராஜ்ஜியத்தில் உன்னால் மக்கள் துன்பப்படுவதை நான் சகித்துக்கொண்டிருக்க முடியாது" என்றான்.


கலிபுருஷன் உடல் நடுங்க எழுந்தவன், இரு கைகளையும் கூப்பியவனாய் "ஹே ராஜன், இந்த நாட்டை விட்டு வெளியேறி வேறிடத்தில் சென்று வசிக்குமாறு உத்தரவிட்டீர்கள். நான் எங்கு சென்று வசிப்பேன்? இந்தப் பூமண்டலம் முழுமையும் உம்முடைய ஆக்ஜைக்குள் கட்டுப்பட்டதன்றோ! உம்முடையதல்லாது ஒரு ஊசி குத்தும் இடம் கூடக் கிடையாதே. உம்மையே சரண் என்று பணிந்து விட்ட எனக்குப் போக்கிடம் இல்லாது போய்விட்டது. நீங்களே ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் காட்டுங்கள். அங்கு சென்றுநான் வசிப்பேன்" என்றான். பரீக்ஷித்தும் அவன் கோரிக்கைக்கு இணங்க வேண்டியதாயிற்று. 

 "ஹே கலிபுருஷா, நீ வசிக்கக்கூடிய இடங்களை நான் குறிப்பிடுகிறேன். அந்த இடங்களில் நீ தாராளமாக வசிக்கலாம். 

  சூதாட்டம்,  

 மது அருந்தும் இடம், 

  ஸ்திரீகளிடம் அதிக ஆசை கொண்டு அவர்களுக்கு சேவை புரியும் இடம், 

 பிராணிவதை நடக்கும் இடம் 

ஆகிய இந்நான்கு விதமான அதர்மம் நடக்கும் இடங்களை உனக்களித்தேன்" என்றான்.

கலிபுருஷன் மீண்டும் அரசனை வணங்கி, "ஹே ராஜன், என் விஷயத்தில் தாங்கள் தயை காட்டினீர்கள். தாங்கள் குறிப்பிட்ட இந்நான்கும் எந்த ஒன்றிலேயே அடங்குகிறதோ அந்த ஸ்தானத்தை எனக்குத் தாருங்கள்" என்று வேண்டினான்.  

 அரசனும் ஸ்வர்ணத்தை (பொன்) கலிபுருஷனுக்கு ஸ்தானமாக அளித்தான். ஆகவே,  

 தர்ம சீலர்கள் பொய் சொல்லுதல்,  

 கர்வம் கொள்ளுதல், 

 ஸ்திரீகளிடம் ஆசை,  

  பிறரை ஹிம்சித்தல், 

ஸ்வர்ணம் முதலான ஆபரணங்கள் ஆகியவற்றில் பிரியம்  

இவ்வனைத்தையும் ஒதுக்கி வாழவேண்டும் என்று சொல்லப்பட்டது. கலிபுருஷன் அரசனை நமஸ்கரித்து அவனிடம் விடை பெற்றுச் சென்றான். அதன் பின்னர் 


பரீக்ஷித்து தர்மதேவதையின் அழந்த மூன்று பாதங்களான தவம், சௌசம், தயை ஆகியவற்றை திரும்பவும் அடையச் செய்து விடைகொடுத்து அனுப்பினான். பூமிதேவியும் அரசனைப் பலவாறு புகழ்ந்து கொண்டாடித் தன் இருப்பிடம் திரும்பினாள். 

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم