நடுபழனி முருகன் திருக்கோயில் - மேல்மருவத்தூர் அருகில்

 




குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்ற முதுமொழிக்கேற்ப மேல்மருவத்தூருக்கு அருகில் பெருகாரணை என்ற இயற்கை எழில் கொஞ்சும்  சிற்றூரில் ஒரு சிறிய குன்றில் முருகப் பெருமான், தண்டாயுதபாணி என்ற பெயரில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இந்த அழகிய முருகன் திருக்கோயில் நடுபழனி என்று அழைக்கப்படுகிறது.  ஒரு சமயம் காஞ்சிப் பெரியவர் பாதயாத்திரை மேற்கொண்ட போது இந்த கிராமத்திற்கு வந்ததாகவும் அவர் இந்தக் கோயிலுக்கு நடுபழனி என்ற பெயரைச் சூட்டியதாகவும் கூறுகிறார்கள். குன்றின் அடிவாரத்தில் அமைந்த கோயிலின் நுழைவாயிலில் ஒரு சிறிய மண்டபம் காணப்படுகிறது. இதன் வலதுபுறம் விநாயகர் சந்நதி அமைக்கப்பட்டுள்ளது.

விநாயகப் பெருமானை வழிபட்டு 108 படிக்கட்டுகளைக் கடந்து மலைக்கோயிலை அடையலாம். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்ரீமுத்துசுவாமி சுவாமிகள் என்பவர் கனவில் முருகப் பெருமான் தோன்றியதாகவும், அதன் பின்னர் ஸ்ரீமுத்துசுவாமி சுவாமிகள் தற்போது கோயில் உள்ள இடத்தில் ஒரு வேலை அமைத்து வழிபடத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. மூலவர் ஸ்ரீதண்டாயுதபாணி சுமார் மூன்று அடி உயரத்தில்  மரகதக்கல்லினால் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளார். தன் புன்னகையாலேயே பேரருள் வழங்கும் முருகப் பெருமானைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது! நடுபழனி மலைக்கோயிலில் அமைந்துள்ள முருகப்பெருமானின் உருவம் பழனியில் அமைந்துள்ள ஸ்ரீதண்டாயுதபாணியை நினைவுபடுத்தும் விதத்தில் அதைப்போலவே அமைந்துள்ளது.

ஸ்ரீதண்டாயுதபாணியின் இருபுறங்களிலும் இரண்டு மயில்களும் நாகங்களும் பின்புறத்தில் மயில் தோகையும் வெள்ளியால் உருவாக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. மூலஸ்தானத்தின் இடதுபுறம் ருத்திராட்ச மண்டபம் காணப்படுகிறது. இதில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் வள்ளி-தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி அவருடைய வாகனமான மயிலின் மீது அமர்ந்த அழகிய திருக்கோலத்தில் தரிசனம் நல்குகிறார்.

மூலஸ்தானத்தின் வலதுபுறத்தில் ஸ்ரீ நாக தத்தாத்ரேயர் சந்நதி அமைந்துள்ளது. இந்த நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான சுவாமிமலை, திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பழனி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றின் சுதைச் சிற்பங்கள் கண்ணைக் கவரும்வண்ணம் அழகிய முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இதுமட்டுமின்றி கோயிலின் பல இடங்களில் பலவிதமான சுதைச் சிற்பங்கள் வண்ணமயமாக, நெஞ்சை அள்ளும் வகையில் காட்சியளிக்கின்றன. கோயில் வளாகம் முழுவதும் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுவது கட்டாயமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

மூலவருக்கு செவ்வாய்க் கிழமைகளிலும், மாதக் கிருத்திகை தினத்திலும் பாலாபிஷேகம் நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் இந்த திருக்கோயிலுக்கு காவடியோடு பாத யாத்திரையாக வந்து ஸ்ரீதண்டாயுதபாணியை தரிசிக்கிறார்கள். இந்த முருகப் பெருமானை மனமுருகிப் பிரார்த்தித்தால் திருமணத் தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். 

தற்போது இந்த ஆலயம் மைசூர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமி தத்தா டிரஸ்டின் மூலம் சிறப்பான முறையில்  நிர்வகிக்கப்படுகிறது.

கோயில் காலை 7.00 முதல் நண்பகல் 12.00 மணிவரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8.00 மணிவரையிலும் திறந்திருக்கும். 

மேல்மருவத்தூரிலிருந்து அச்சிறுபாக்கம் செல்லும் வழியில் அச்சிறுபாக்கத்திற்கு இரண்டு கி.மீ.க்கு முன்னால் இடதுபுறத்தில் நடுபழனி முருகன் கோயில் வளைவு காணப்படும். அந்த பாதையில் நுழைந்து எங்கும் திரும்பாமல் சுமார் ஆறு கி.மீ. பயணித்தால் நடுபழனி முருகன் கோயிலை அடையலாம்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post