ஸ்ரீசக்ரம் எதற்கு? ஸ்ரீசக்ர பலம் என்ன?
காஞ்சி மகான் விளக்கம்
காஞ்சிபுரத்திலே ஸ்ரீசக்ரம், மாங்காட்டிலே அர்த்தமேரு ஸ்ரீசக்ரம், திருவானைக்காவிலே ஸ்ரீசக்ர ரூபமான தாடகம்... இன்னும் இதுபோன்ற பல இடங்களில், ஆதிசங்கர பகவத் பாதர்களால் ஸ்தாபிக்கப்பட்டு உள்ளன.
இவற்றின் விசேஷ காரணங்கள் என்ன ஸ்வாமி? என்று காஞ்சி மகானிடம் கேள்வி எழுப்பினார் பக்தர் ஒருவர்.அதற்கு கருணையே உருவெனக் கொண்ட காஞ்சி மகா பெரியவா, இப்படியாக அருளினார்...
’’ அம்பாளின் சக்தியானது, சில சமயங்களில் சில இடங்களில் ஜனங்கள் தாங்க முடியாத படி பொங்கிக் கொண்டு வெளிப்படுகிறது. ஆதியில் திருவானைக் காவில், அகிலாண்டேஸ்வரியின் சக்தி இப்படித்தான் ரொம்பவும் உக்கிரமாக இருந்தது.
அப்போது சாக்ஷாத் பரமேஸ்வர அவதாரமான ஆச்சார்யாள், ஸ்ரீசக்ரமாகவும் சிவ சக்ரமாகவும் இரண்டு தாடகங்களைச் செய்து, அவற்றிலேயே அம்பாளின் அதீதமான சக்தியை இழுத்து வைத்து சமன்படுத்தி, அவற்றை அம்பாளுக்கே அணிவித்தார்.
காஞ்சிபுரத்தில் ஸ்ரீராஜராஜேஸ்வரியான காமாட்சி யின் சக்தி உக்கிரமாக இருந்தபோது, அதே ஆச்சார்யாள் அந்த உக்ரக் கலையை அவளுடைய எதிரிலேயே ஒரு ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்து, அதில் ஆகர்ஷித்து வைத்து அடக்கினார். அன்றிலிருந்து அம்பிகையும் பரம சௌம்ய மூர்த்தியாகிவிட்டாள். எல்லோருக்கும் கருணைக் கடாக்ஷம் செய்து வருகிறாள்’’.
இவ்வாறு காஞ்சி மகான் அருளியதாகச் சொல்கிறது ‘தெய்வத்தின் குரல்’.
Post a Comment