சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார். சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார் என்று நாம் பாடுகிறோம்.
சிவன் முழுமுதற் கடவுள். அவரை நெக்குருகி பாடிய ஞானிகள் சிலரின் பாடல்களிலிருந்து பக்தி பாவபூர்வ
சிறந்த
பொருட் செறிவு,
சொற் செறிவு
கொண்ட
சில வரிகளைப் படிப்போம், ஆனந்திப்போம்,
அருள் வேண்டி சிவானுபவத்தில் கரைவோம்.
ஓம் என்ற சப்தத்திலே அஞ்சு கோடி மந்திர சக்தி இருக்கிறது. நெஞ்சு அதை விடாது சப்திக்க வேண்டும். நம சிவாய என்ற அஞ்செழுத்தில் சகல சக்தி மட்டுமல்ல. பாப விமோசனமும் உள்ளது.
அஞ்சு கோடி மந்திரமு நெஞ்சுளே யடக்கினால்
நெஞ்சுகூற வும் முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே
நமசிவாய என்று சொல்லும் அக்ஷரம் சிவனே இருக்கும் இடம். சகல அபாயத்திலிருந்து தப்ப உதவும் உபாயம். பிராணனை பாபத்திலிருந்து மீட்டு நற்கதி தர உதவும் மந்திரம் நமசிவாயம்
சிவாய மென்ற அட்சரம் சிவனிருக்கு மட்சரம்
உபாய மென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடமுற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாயம் அஞ்சு எழுத்துமே
அடே பரம சிவா, நீ இருக்க எனக்கு வேறு யாரிடம் பயம்? எனக்கு நீ கொடுத்த பலம் எது தெரியுமா? என்னிரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி சிரமேல் கரம் குவித்து ஹர ஹரா ஓம் நமசிவாயா என்று கண்ணில் நீர் பெருக நெஞ்சுருக உன்னை நினைத்து கூப்பிடுவது ஒன்று தானே.
பரமுனக்கு எனக்குவேறு பயமிலை பராபரா
கரம்எடுத்து நித்தலுங் குவித்திடக் கடவதும்
சிரம்உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம்எனக்கு நீயளித்த ஓம்நமசி வாயமே.
பராத்பரா, ஒன்றே ஒன்று அது நீ ஒன்று தான். பலவாகத் தோன்றும் எல்லாமே நீ ஒன்றே தான். அழுக்காறு கயமை, வஞ்சகம், காழ்ப்பு போன்ற என்னுள்ளே களிம்புகள் நிறைய இருந்தாலும் அவற்றை நீக்கி நானாகிய இந்த களிம்பேறிய தாமிரப் பாத்திரத்தை மும் மலமகற்றி , பளபளக்கச் செய்வதும் நமசிவாயா எனும் உன் நாமந்தான். அது தான் என்னுள்ளேயே நிலையாக நிற்கிறதே.
ஒன்று மொன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றுமின்றும் ஒன்றுமே அனாதியான தொன்றுமே
கன்றல்நின்று செம்பொனைக் களிம் பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வம்உம்முளே அறிந்ததே சிவாயமே.
கடைசியாக ஒன்று சொல்கிறேன்.
சிவா, நீ ஆதி, அந்தம் மூல விந்து, நாதம், பஞ்ச பூதம். நீயே நமசிவாய என்கிற பஞ்சாக்ஷரம். வேறு என்ன இருக்கிறது சொல்ல?
ஆதியந்த மூலவிந்து நாதமைந்து பூதமாய்
ஆதியந்த மூலவிந்து நாதம்ஐந்து எழுத்துமாய்
ஆதியந்த மூலவிந்து நாதமேவி நின்றதும்
ஆதியந்த மூலவிந்து நாதமே சிவாயமே.
மேலே சொன்னது அத்தனையும் நானல்ல. சிவா வாக்கியர் எனும் பெரிய சித்தர் பிரான்.
இப்படிப்பட்ட பிறவி, மனிதப்பிறவி நமக்கு எப்படியெல்லாம் துன்பப்பட்ட பிறகு கிடைத்திருக்கிறது தெரியுமா? அதெல்லாம் கடந்து உன் நாமம் பற்றி கடைத்தேற வழி வகுத்த விமலா, சிவபெருமானே, உன்னையே நான் ''சிக்'' க்கெனப்பிடித்தேன். என்கிறார் மணி வாசகர். நாமும் பிடித்துக் கொள்வோமா? .
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Post a Comment