ஒரே எழுத்துடைய மந்திரம்

 


ஒரே  எழுத்துடைய மந்திரம் 


ஒரே ஒரு எழுத்தால் ஆன மந்திரம்தான்.! மிக ஆச்சர்யமான இந்த ஓரெழுத்து மந்திரம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? 

இந்த மந்திரத்தை ”பேசாத மந்திரம்”, ”ஊமை எழுத்து”, ”நெஞ்செழுத்து”, ”மௌன அட்சரம்” “நாயோட்டு மந்திரம்” என பல பெயர்களில் சித்தர்கள் தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்.

கொங்கணவர் இந்த மந்திரம் பற்றி இப்படி சொல்கிறார்.. “ஓம் என்ற அட்சரம் தானுமுண்டு அதற்க்குள் ஊமை எழுத்தும் இருக்குதடி”

திருமூலர் இதனை “நாயோட்டு மந்திரம்” என்கிறார்.

“நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும் என்பரே” நாயோட்டு மந்திரம் இந்நாய்க்கு மிக உகந்ததே நாயோட்டு மந்திரம் நாயேன்யான் விட்டிலேன் நாயோட்டு மந்திரம் இந் நாயை வீடு சேர்க்குமே! திருமூலர்.

சிவவாக்கியர் இந்த மந்திரத்தினை இப்படி குறிப்பிடுகிறார் “அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து சொல்ல வல்லிரேல்”

மற்றொரு பாடலில் சிவவாக்கியர் பின்வருமாறு விளக்குகிறார்.

அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா? உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா? அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா? விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?

வள்ளலாரும் இந்த மந்திரத்தின் குறிப்பை இப்படிச் சொல்கிறார்.

“ஒரேழுத்தில் ஐந்துண்டென்பார் வெண்ணிலாவே -அது ஊமை எழுத்தாவதென்ன வெண்ணிலாவே ”

அகத்தியரும் இந்த மந்திரத்தின் அருமைகளை பின் வருமாறு கூறுகிறார்.

“எகமேனும் ஓரெழுத்தின் பயனைப் பார்த்தே எடுத்துரைக்க இவ்வுலகில் எவருமில்லை ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக் கொண்டே அறிந்தொமேன்பர் மௌனத்தை அவனை நீயும் வேகாச் சாகாத தலை கால் விரைந்து கேளாய் விடுத்த அதனை உரைப்பவனே ஆசானாகும் தேகமதில் ஒரெழுத்தை காண்பவன் ஞானி திருநடனம் காண முத்தி சித்தியாமே!”

இத்தனை மகத்துவம் வாய்ந்த அந்த ஓரெழுத்து மந்திரம்தான் என்ன?

பிரணவ மந்திரமான ”ஓம்” காரத்தில் இந்த ஓரெழுத்து மந்திரம் ஊமை எழுத்தாக உள்ளது என்கிறார் கொங்கணவர்.

சிவவாக்கியரோ “அஞ்செழுத்தில் ஒரேழுத்து ” என குறிப்பு தருகிறார். அதாவது ந ம சி வா ய என்கிற ஐந்தெழுத்தில் ஓர் எழுத்து என்கிறார்.

திருமூலரோ ”நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும்” என்கிறார். அது சரி!, நாயை எப்படி விரட்டுகிறோம்…..!

”ச்சீய்”….!

ஆம்! , இத்தனை மறைவாக சித்தர்கள் குறிப்பிட்ட அந்த ஓரெழுத்து மந்திரம் “சி” என்பதாகும். இதனை ”சி” காரம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஓம் என்கிற ஓங்காரத்தில் இந்த ”சி” ஊமை எழுத்தாய் இருக்கிறது என கொங்கணவர் ஏன் சொன்னார்?

இதற்கான விளக்கம் பின்வரும் சிவவாக்கியர் பாடலில் கிடைக்கிறது.

அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா? உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா? அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா? விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?

அகாரமாகிய ”அ”வ்வும், உகாரமாகிய ”உ”வ்வும் சிகாரமாகிய ”சி”வ்வும் இல்லாமல் இணைய முடியாது. இது எப்படி என்பதை யோகி ஒருவரே உபதேசிக்க வேண்டும் என்கிறார். இந்த ரகசியம் காலம் காலமாய் குருமுகமாவே வழங்கப் படுகிறது. 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post