உயிர் போக்கும் கொடிய விசத்தை வச்சிருக்கும் நாகபாம்புக்கு நல்ல பாம்புன்னு பேரு

 

அது என்னங்க உயிர் போக்கும் கொடிய விசத்தை வச்சிருக்கும் நாகபாம்புக்கு நல்ல பாம்புன்னு பேரு?
பாம்புகளால் நிலம் வளம்பெறுவதாலும், பாம்புகளை வழிப்பட்டால் தங்கள் குடும்பத்தில் செல்வவளம் பெருகி நிலைக்குமென்றும், ஆயுள்பலம் கூடுமென்று மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் கோவில், குளக்கரை அல்லது அரச மரத்தடி போன்ற இடங்களில் பாம்பு வடிவம் செதுக்கப்பட்ட சிலாரூபத்தை நட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. நாகராஜாவை தெய்வமாக வழிபடும் வழக்கம் காலம்காலமாக தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கு. அமாவாசையன்று சிவன்கோவிலில் இருக்கும் நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபட்டு வந்தால் திருமணத்தடை நீங்குமென்பது எங்க ஊரு நம்பிக்கை. செவ்வாய், வெள்ளிகளிலும் அம்மன் கோவில்களில் இருக்கும் நாகர் சிலையை வழிபடும் வழக்கமும் உண்டு.
கிராம தேவதை கோவில்களில் பெரும்பாலும் புற்றின்முன் ஐந்து அல்லது ஏழு தலை நாகர் சிலையின் அம்மன் சிலை இருக்கும். மண்ணாலான உலகத்தை குறிக்க புற்றையும், ஈரேழு உலகமும் தன் குடைக்கு கீழ் அடக்கம் என்பதன் குறியீடே இத்தோற்றம். சிவபெருமான் நாகங்களையே ஆபரணங்களாக அணிந்தவர். திருமாலோ ஆதிசேடனாகிய பாம்பையே படுக்கையாக கொண்டவன். சக்தியின் பல அவதார தோற்றங்களும் பாம்பை அணியாக அணிந்திருப்பர். விநாயகர் நாகத்தை உதரபந்தமாகக் கொண்டவர். திருமுருகன் மயிலின் காலில் நாகம் அடங்கிக் கிடப்பதைக் காணலாம். இதுமட்டுமின்றி சிவனின் அம்சமான காலபைரவரும் நாகத்தை அணிந்தவர்தான்.. எல்லா கடவுளும் பாம்பை அணிந்திருப்பதால் அவை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததென்று உணர்ந்துக்கொள்ளலாம்...
பிரம்மனின் மகனான காஷ்யப்ப முனிவரின் மனைவியான கத்ருவின் பிள்ளைகளே நாகங்கள்ன்னு நம்பப்படுது. நாகங்களை கௌரவித்து வழிபடுவதற்காக கொண்டாடப்படும் உற்சவமே நாக பஞ்சமி. ஆடி மாத வளர்பிறை பஞ்சமியன்று இது கொண்டாடப்படுகிறது. ஹேமாத்ரி என்ற சமஸ்கிருத கிரந்தத்தில், நாக பஞ்சமியன்று நாக பூஜை செய்யும்போது அனுஷ்டிக்கப் படவேண்டிய நியமங்கள் கூறப்பட்டுள்ளன.
பஞ்சமிக்கு முதல் நாளாகிய சதுர்த்தியன்று ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். பஞ்சமியன்று பகலில் உண்ணாமல் இரவு மட்டுமே உண்ண வேண்டும். வெள்ளி, மரம், மண், சந்தனம், மஞ்சள் ஆகியவற்றில் ஏதாவதொன்றில் நாக உருவத்தைச் செய்து பூஜையில் வைத்து வழிபட வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் பாம்புக் கோலமிட்டு அலரி, மல்லிகை, செந்தாமரை போன்ற மலர்களாலும் சந்தனப்பொடி போன்ற வாசனை திரவியங்களாலும் பூஜை செய்யவேண்டும். அஷ்ட நாகங்களாகிய அனந்தன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், பிங்களன், சங்கன், பத்மன், மஹாபத்மன்ஆகியவை இன்னமும் பூமியில் வாழ்வதாக மக்கள் நம்புவதால், இவை எட்டும் பூஜிக்கப்படுகின்றன. அன்றைய தினம் அன்னதானம் செய்வது சிறப்பானதென கூறப்பட்டுள்ளது.
நாக வழிபாடு இந்தியாவில் மட்டும்தான் இருக்கான்னு பார்த்தா, அப்படி இல்லை. நாக வழிபாடு உலக முழுக்கவே வெவ்வேறு ரூபத்தில் இருக்கு. நமது பாரத நாட்டின் இதிகாசமான ராமாயணம், மகாபாரதக்காலத்திலிருந்து இந்தியாவிலிருந்து மாயன் என்னும் இனம் வெளியேறி, நாகமய என்ற இனம் தோன்றியதாக சொல்லப்படுது. நாகர் இனத்துக்கும் மாயன் இனத்துக்கும் ஏராளமான ஒற்றுமை இருக்கு. மாயன் இனத்தை இந்தியாவில் நாகர்ன்னும், நாகரை காலப்போக்கில் 'தனவாஸ்'என்றும் அழைத்தனர். இவர்களது தலைநகர் நாக்பூர் ஆக இருந்தது எனவும் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. . பின்பு இவர்களது நாகரிகம் பாபிலோனியா, அக்காடியா, எகிப்து மற்றும் கிரேக்க நாடுகளுக்கு பரவி இருக்கலாம்ன்னும் சொல்றாங்க.
இலங்கையிலும் நாகர் இனத்தினர் வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் வானியல், கட்டடக்கலை, நீர்ப்பாசனத் தொழில் நுட்பம் போன்றவற்றில் சிறந்து விளங்கினார்கள். நாகர் இனம் என்று தனியாகப் பிரித்துப் பார்க்க இலங்கையில் அந்த இனம் இல்லாமல் அங்கு வாழும் அனைத்துத் தமிழ் மக்களிலும் கலந்து விட்டார்கள்ன்னும் நம்பப்படுது.
நாகரைக் குறிக்கும் ‘நாக’ என்று ஆரம்பிக்கும் பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பதென்பது இலங்கை, இந்தியா முக்கியமா தமிழ் மக்களிடையே இன்றும் நடக்குது. இதிலிருந்து நாகர்களுக்கும், மனிதர்களுக்குண்டான பந்தம் தெரிய வரும்.
நாகர், மாயன் இனங்கள் பாம்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்காங்க. பாம்பின் அசைவுகள் நடனம் தோன்றுவதற்கும், எழுத்துகளின் வடிவங்கள் தோன்றுவதற்கும் காரணமா இருந்திருக்கலாம்ன்னு பாம்புகள் பற்றி ஆராய்பவர்கள் சொல்றாங்க.
பாம்பை செல்வத்தின் குறியீடாகவும், இனவிருத்தியின் அடையாளமாகவும் மாயன்களும், நாகர்களும் கருதுனாதல பாம்பு வணக்கத்துக்குரியதாகிடுச்சு. இலங்கையில் தமிழர்கள் தங்கள் இந்துத் திருமணங்களில் மணமகளையும், மணமகனையும் பாம்பின் வடிவமாக தங்களை அலங்காரம் செய்கின்றனர். மணமகள் அணியும் ஜரிகைப் புடவை வடிவமைப்பு, நெற்றிப் பட்டயம், சடைநாகம் அனைத்து அலங்காரங்களும் பாம்பை மையமாக வைத்தே அமைகின்றன. மணமகனும் ஜரிகைப்பட்டு வேஷ்டி சால்வை அணிந்து, பாம்பின் தலை வடிவத்தில் தலைப்பாகை அணிந்து அலங்காரம் செய்து கொள்கிறார்.
மாயன்களின் வழிபாட்டு இடங்கள் பாம்பின் வடிவமாக அமைந்துள்ளன. இசைக் கருவிகள் மீது பாம்புச் சட்டையை வைக்கிறார்கள். அதனால் இசைக்கருவிகளை மீட்டும்போது நல்ல நாதம் ஒலிக்கும் என்ற நம்பிக்கையே! வயல்களில் பாம்பு காணப்பட்டால், நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையும், வீடுகளில், பாம்பு வந்து போனால் செல்வம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு உண்டு. ‘பாம்பை’மாயன்களும் நாகர்களும் தெய்வமாக வழிபட்டார்கள்.
மாயன் மொழி, மாயன் மதம், மாயன் கலாசாரம் அறிவியல் என எல்லாவற்றையும் உடைய முதல் நாகரிக மக்கள் இவர்களே! எகிப்துக்கும், கிரேக்கத்துக்கும் கணிதம், வானியல், கட்டடக்கலை ஆகியவற்றைக் கொண்டு சென்றவர்கள் இவர்களே! இலங்கையில், இந்தியாவில், மியான்மரில், ஜப்பானில், ரஷ்யாவில், சீனாவில், கிரேக்க நாட்டில், எகிப்தில் ‘நாக’ என்று ஆரம்பிக்கும் பல நகரங்கள், கிராமங்கள் உண்டு. கிறித்துவ மத மோசஸின் கையிலுள்ள கோலை அவர் விவாதத்தின்போது கீழே எறிந்திட, அது பாம்பாக மாறி நெளிந்து வளைந்து ஓடியது. அந்தக் கோலின் பெயர் நாகுஸ்தான் அல்லது நாகுஸ்தா . அதன் பொருள் பாம்பு என்பதாகும். இந்தியாவில் நாகாலந்து மாநிலமும் நாகர்களால் உண்டானதே.
தென் அமெரிக்காவிலுள்ள பூர்வீகவாசிகளான மாயன் இனத்தவர்கள், பெரும்பான்மையாக மெக்ஸிகோ, குவாத்தமாலா, எல்சல்வடோர் ஆகிய நாடுகளில் வாழ்ந்துள்ளனர். இப்படி உலகம் முழுவதும் நாக்ர்களின் வம்சாவளியினரும் நாக வழிபாடு பரவிக்கிடக்குது.
உலகம் முழுவதும் நாக வழிபாடு பிரபலமாக உள்ளது. உலகத்தை கடலில் ­மூழ்காமல் தாங்கி பிடித்திருப்பது பாம்புதான் என ஆப்பிரிக்கா மக்கள் நம்புகின்றனர். எகிப்து, ரோம், பாபிலோனியா, கிரேக்கம் போன்ற நாடுகளில் நாகவழிபாடு சிறப்பாக நடந்து வருவதற்கான சான்றுகள் உள்ளது. ஆஸ்திரேலியாவிலும் நாகவழிபாடு உள்ளது. ஆப்பிரிக்காவில் உயிர் உள்ள மலைபாம்பை இன்றும் வணங்குகின்றனர். நாகர் வழிபாடு சைவம், வைணவம், சமணம், பவுத்தம் என்ற நான்கு சமயத்துக்கும் பொதுவானது.
சிவபெருமான் நாகத்தை தனது கழுத்தணியாக கொண்டுள்ளார். திருமால் ஆதிசேடன் என்ற பாம்பை படுக்கையாக கொண்டுள்ளார். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைய வாசுகி பாம்பைதான் மத்தாக பயன்படுத்தினர். கொத்த வந்த காளிங்கன் என்ற பாம்பை அடக்கி அதன்மீது கிருஷ்ணர் நடனமாடினார் சமண, சமய தீர்த்தங்கர் பார்சுவநாதரின் திருஉருவம் படமெடுத்த பாம்பின் அடியில் காணப்படுகிறது. புத்தசமய துறவிகள் நாகத்துக்கு கோயில் அமைத்து வணங்கி வந்ததாக ஆதாரங்கள் கூறுகிறது. இலங்கையில் பாம்பின் மேல் அமர்ந்த நிலையில், புத்தர் பெருமான் திருஉருவ சிலையை காணலாம். இந்தியாவில் பழங்காலம் தொட்டே நாக வழிபாடு சிறப்புற்று விளங்குகிறது. இந்திய வரலாற்றில் நாக வழிபாடு பற்றி விரிவாக உள்ளது. கன்னியாகுமரி காஷ்மீர் வரை நாக வழிபாடு சிறப்பாக நடந்து வருகிறது.
என்னதான் நாக வழிபாடு தமிழர்கள் வாழ்வியலில் கலந்திருந்தாலும் நாகர்களுக்கென தனி ஆலயம் தமிழகத்தில் அதிகம் இருப்பதில்லை. பக்கத்து மாநிலமான கேரளத்தில் அதிகமிருக்கு. திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம் மாதிரியான நாகத்தை முன்னிறுத்திய கோவில்கள் பல தமிழகத்தில் இருந்தாலும், அந்த ஆலயத்தில் நாகர்களுக்கென தனிச்சன்னிதி அமைந்திருக்கும். அவ்வளவே! தமிழ்நாட்டில் நாகரை மூலவராக கொண்டது நாகர்கோவில் நாகராஜா கோவில் மட்டும்தான்.
பாற்கடலை கடையும்போது வெளிவந்த ஆலகால விசத்தை சிவப்பெருமான் உண்டது இந்நாளில்தான். அதனால்தான் பாம்பின் விசத்தினால் இனியொருவர் பாதிக்கக்கூடாதுன்னு சொல்லி நாக பஞ்சமி அன்னிக்கு விரதமிருக்க ஆரம்பிக்குறாங்க. ஆடிமாத வளர்பிறை பஞ்சமி திதியில் ஆரம்பிச்சு ஒவ்வொரு பஞ்சமி திதியன்றும் நாகரை வணங்கி அடுத்த நாக பஞ்சமி அன்னிக்கு விரதத்தை முடிப்பர். ஏழு அண்ணன் தம்பிகளோடு பிறந்த பெண்ணொருத்தி கல்யாணம் முடிச்சு வெளியூரில் வசித்து வந்தாள். அவளது தந்தை விதை விதைக்க வேண்டி, நிலத்தை உழும்போது அப்போதுதான் பிறந்திருந்த பாம்பு குட்டிகள்மீது ஏர்கலப்பை மோதி அனைத்தும் இறந்து போயின. குட்டியை தேடி வந்த தாய் பாம்பு , குட்டி இறந்திருப்பதை கண்டு, கோவமுற்று தந்தை உட்பட சகோதரர்களை கொன்றுவிட்டு, மிச்சமிருக்கும் பெண்ணை பழிவாங்க அவளை தேடி வெளியூருக்கு வந்தது. அங்கே அந்த பெண், அங்கு நாக சதுர்த்தி விரதம் இருந்ததை கண்டு, அவளிடம் சென்று நடந்ததை கூறி அவளை மன்னித்தது. அவளும் நாகத்திடம் மன்றாடி தந்தை, சகோதரர்களை உயிர்ப்பித்தாள். அதனால், நாக பஞ்சமி அன்னிக்கு விரதமிருந்தால் கேட்டது கிடைக்கும்.
திருச்செங்கோடு அருகே அர்த்த்நாரிஸ்வரர் கோவில் மலை ஏறும் பாதையில் ..நந்தி கோயிலில் இருந்து சற்றே கீழிறங்கினால் நந்தி மலைக்கும், நாக மலைக்கும் இடையே ஒரு பள்ளம் அமைந்துள்ளது. அதுவே நாகர் பள்ளம் என அழைக்கப்படுது. இவ்விடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷனின் முழு உருவமும் 60 அடி நீளத்தில் பார்ப்பதற்கே பிரம்மாண்டமான தோற்றத்தில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.
நாக பஞ்சமி அன்னிக்கு விரதமிருந்து ஒரு வருசத்துக்கு இந்த விரதத்தை கடைப்பிடிச்சா நாக தோசம் நீங்கும். திருமணம் கைகூடும். பிள்ளை வரம் கிடைக்கும்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post